3 வருடங்களுக்குப் பிறகு வெளியான சிம்பு படம். சென்னை காசி திரையரங்கில் படம் பார்க்க சிம்பு வந்திருந்தார். ரசிகர்களின் மகிழ்ச்சியை கேட்கவும் வேண்டுமா? பட்டாசு வெடித்து காதை பஞ்சராக்கினார்கள். அந்த வழியாக வண்டியில் சென்ற பாசஞ்சர்களுக்கு இது கண்கொள்ளா வேடிக்கை.
சிம்பு ரசிகர்களை கட்டிப்போடும் இளமை துள்ளல் கதை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹன்சிகாவை காதலிக்கிறார் சிம்பு. நான் ஏற்கனவே திருமணம் நிச்சயமானவள் என்று ஒதுங்கிக் கொள்கிறார் ஹன்சிகா. தாலி ஏறுகிற கடைசி நேரத்தில்கூட காதல் கைகூடவும், மாப்பிள்ளை இடமாறவும் வாய்ப்பிருக்கு என்று நண்பனாக ஹன்சிகாவுடன் ஒட்டிக் கொள்கிறார் சிம்பு. ஒட்டிக் கொண்டவர் ஹன்சிகாவை கட்டிக் கொண்டாரா, காதலிக்க வைத்தாரா என்பது கதை.
பிளஸ் டூ வில் பெயிலாகிவிட்டு சொந்த முயற்சியில் வேலை தேடும் வேலையில்லா பட்டதாரி வேடம் சிம்புவுக்கு. பொழுதுபோகாதவனுக்கு பக்க துணை என்பது போல் சந்தானம். கூடவே விடிவி கணேஷ். கலாய்ப்பு என்றால் அப்படியொரு கலாய்ப்பு. காதல் நிறைவேறியதற்காக விடிவி கணேஷின் தங்கச் சங்கிலியை பிள்ளையார் கோவில் உண்டியலில் போடுவதும், அதன் பிறகு நடக்கும் கலாட்டாவும் திரையரங்கை கலகலப்பாக்குகிறது.
நடை உடை பாவனை நடனம் என அனைத்திலும் அசத்துகிறார் சிம்பு. சவுண்ட் அதிகமென்றாலும் சந்தானத்தின் காமெடி ரசிக்கிற ரகம். விடிவி கணேஷ் வேறு இருக்கிறாரா, பொளந்து கட்டுகிறhர்கள்.
ஹன்சிகாவின் அழகும் இளமையும் காமெடியைத் தாண்டி தளும்புகிறது. சிம்புக்கு வந்த கூட்டத்தைவிட ஹன்சிகாவுக்கு விசிலடித்த வாய்கள் அதிகம். கலைடாஸ்கோப் மாதிரி நொடிக்கு பத்து முகபாவம் வருகிறது ஹன்சிகாவின் முகத்தில். அந்த துறுதுறுப்புக்கும் குறுகுறுப்புக்கும் இன்றைய தேதியில் இணையில்லை.
தமனின் பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம் போடுகிறார்கள். லாஜிக் ஓட்டைகளை காதலும், காமெடியும் அடைத்துவிடுவதால் படத்தை பரிபூரணமாக என்ஜாய் செய்கிறார்கள் ரசிகர்கள்.
இங்கு ரசிகர்கள் என்பது இளமையின் வாசலில் மனசையும், உடலையும் வைத்திருப்பவர்கள். மற்றவர்களுக்கு?
வாலு மற்றுமொரு விடலைக் காதல் அவ்வளவே.
News source :webdunia
Comments
Post a Comment