சினிமா காட்சிகளை மிஞ்சிய திகிலூட்டும் சிலை கடத்தல் சம்பவங்கள்: டைரக்டர் சிக்கியது எப்படி?- புதிய தகவல்கள்
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். இந்த சிலைகள் எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் ஆட்சி காலத்தில் நுட்பத்துடன் செதுக்கப்பட்டவையாகும். இந்த சிலைகளை வாங்கி தங்களது வீடுகளில் அழகுப் பொருளாக வைப்பதில் வெளிநாட்டினருக்கு அவ்வளவு பிரியம். இதனால் இதுபோன்ற சிலைகளை எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தும் வாங்குவதற்கு வெளிநாட்டினர் தயாராக உள்ளனர்.
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழக கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர். வெளி நாட்டினரின் இதுபோன்ற சிலை மோகமும், கோடிக் கணக்கில் அவர்கள் கொட்டிக் கொடுக்கும் பணமுமே, சிலை கடத்தல் கும்பலை கட்டிப் போட்டு வைத்துள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டினர் கை நிறைய அள்ளிக் கொடுக்கும் கோடிகளுக்கு ஆசைப்பட்டு தமிழக இளைஞர்கள் பலர் சிலை கடத்தல் மன்னர்களாக மாறி வருகிறார்கள். இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷமாக திகழ கூடிய பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஐம்பொன் சிலைகள் தொடர்ந்து கொள்ளை போய் கொண்டே இருக்கின்றன.
இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக போலீசில் பொருளாதார குற்றப்பிரிவில் தனியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இவர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, சிலைகளை வாங்கச் செல்பவர்கள் போலவே மாறி கடத்தல்காரர்களை கைது செய்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜெயிலிலேயே காலம் தள்ளி வருகிறார். இதன் பின்னர் சிலை கடத்தல் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்நிலையில், சினிமா டைரக்டர் வி.சேகர், சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றிருப்பது தமிழ் திரை உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது படத்தில் வரும் கதையின் நாயகர்கள் குறுக்கு வழியில் செல்ல ஆசைப்பட மாட்டார்கள். உழைத்து... போராடி முன்னுக்கு வருவார்கள். எந்தவித ஆபாச காட்சிகளும் இன்றி குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் அற்புதமாக படம் பிடிப்பதில் கைதேர்ந்தவர் வி.சேகர்.
இப்படிப்பட்ட ஒரு டைரக்டர் ரூ.80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருப்பது, அவரது படத்தை ரசித்து பார்த்த பெண்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'குடும்ப இயக்குனர்' என்று பெயரெடுத்த வி.சேகர், கடத்தல் கும்பலிடம் சிக்கியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சினிமாவில் வரும் கடத்தல் காட்சிகளை மிஞ்சும் வகையில் சிலை கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்துள்ளது.
திகில் கிளப்பும் இந்த கடத்தல் சம்பவங்களின் பின்னணியை பார்ப்போம்.
கடந்த மே மாதம் பாண்டி பஜார் பகுதியில் வைத்து சில கடத்தல் கும்பலை சேர்ந்த தனலிங்கம், கருணாகரன் ஆகிய 2 பேர் போலீசில் சிக்கினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரிய அளவில் 'நெட் வொர்க்' அமைத்து சிலை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
இக்கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். அப்போது தான், கைதான கருணாகரனின் சகோதரி மாலதி மூலமாக கடத்தல் கும்பலை கண்டு பிடிக்க போலீசுக்கு 'புது வழி' கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வக்கீல் ஒருவர் மூலமாக போலீசில் மாலதி ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தனலிங்கம், கருணாகரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ரூ.80 கோடி மதிப்பிலான 8 சிலைகளும், கொள்ளையடிக்கப்பட்ட விதம் குறித்தும், அது யார் யாருடைய வீட்டில் எல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றியும் புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடுகளின் பட்டியலில் டைரக்டர் வி.சேகரின் வீடும் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து அது தொடர்பான ஆதாரங்களை சேகரித்த பின்னரே போலீசார் வி.சேகரை கைது செய்துள்ளனர். இந்த கடத்தலின் பின்னணியில் 11 பேர் கொண்ட மாபியா கும்பலே செயல்பட்டுள்ளது. கோவில்களில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுப்பதில் செங்குன்றத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மூளையாக செயல் பட்டுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் விருதுநகரை சேர்ந்த மாரி மற்றும் அவனது கூட்டாளிகளான விஜயராகவன், சண்முகம் மற்றும் 8 பேர் செயல்பட்டுள்ளனர். இவர்களிடம் கோவில்களில் உள்ள பலம் வாய்ந்த இரும்பு கம்பிகளை சில நிமிடங்களில் உடைத்து துண்டாக்கும் நவீன கட்டிங் மிஷின் உள்ளது.
இதனையே கொள்ளயடிக்கும் போது பயன்படுத்தியுள்ளனர். சாதாரண கட்டிங் மிஷின்களை கொண்டு இரும்பு கம்பிகளை துண்டிக்கும் போது பலத்த சத்தம் ஏற்படும். ஆனால் இந்த நவீன கட்டிங் மிஷினில் அதுபோன்று சத்தம் வராது. இதுவும் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக இருந்துள்ளது.
இக்கடத்தல் மற்றும் கொள்ளை கும்பல், பெரிய பையை தோளில் தொங்க விட்டுக் கொண்டு வேட்டைக்கு செல்வது போலவே சிலை கடத்தலுக்கு சென்று வந்துள்ளனர். அதில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு, தண்ணீர், கட்டிங் மிஷின் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சிலைகளை கொள்ளையடித்த பின்னர் அதனை பெரிய 'டிராவல் பேக்'கில் வைத்து சுற்றிலும் வைக்கோலை சுற்றி வைத்து சொகுசு கார்களில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இப்படி பையூர் வெங்கடேச பெருமாள் கோவில், உள்ளிட்ட கோவில்களில் கடந்த ஜனவரி மாதம் 8 சிலைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சிலைகள்தான், டைரக்டர் வி.சேகரின் வீட்டில் சில நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. இவைகளை நானே விற்று தருகிறேன் என்று சேகர் உறுதி அளித்திருந்துள்ளார்.
தனது வீட்டில் சிலை இருக்கும் விவகாரத்தை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் கடத்தல் கும்பலிடம் சேகர் கூறியுள்ளார். ஆனால், அவரால் அந்த சிலைகளை விற்றுக் கொடுக்க முடிய வில்லை.
இதன் பின்னர் மேற்கு மாம்பலத்தில் உள்ள பைனான்சியர் ஒருவரின் வீட்டுக்கும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தனலிங்கத்தின் வீட்டுக்கும் சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல இடங்களுக்கு மாற்றியும் சிலையை வாங்க சரியான ஆள் கிடைக்காததால் செங்குன்றத்தில் உள்ள ஜெயகுமாரின் வீட்டுக்கு அவைகளை கொண்டு சென்ற போது தான் கடத்தல் கும்பல் சிக்கி கொண்டது. இந்த சிலைகளை கொள்ளையடித்துக் கொடுத்த மாரி மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு லட்சக்கணக்கில் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ராஜ்குமாரே மாலதி மூலமாக கொடுத்துள்ளார். எப்போதும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், எளிதில் வாய் திறக்க மாட்டார்கள். மாலதி ஒரு பெண் என்பதால், அவர் எதையாவது உளறி விடக் கூடாது என்று கருதியே தலைமறைவு குற்றவாளிகள் அவரை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில்தான் மாலதி போலீசில் ஆஜராகி உண்மைகளை கக்கி, சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இந்த வழக்கில் அவர் அப்ரூவராக மாறுகிறார்
News source:maalaimalar
Comments
Post a Comment