ரம்யா உடன் கணவர் அப்ரஜித் | கோப்பு படம்
சமீத்தில் திருமணமான ரம்யா, தனது கணவரைப் பிரிந்துவிட்டதாகவும், பணியில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர் ரம்யா. அவருக்கும் அப்ரஜித்துக்கும் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. திருமணத்துக்கு பிறகு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் ரம்யா.
சில நாட்களுக்கு முன்பு ரம்யாவும் அவருடைய கணவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து ரம்யா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம். எனது திருமண பந்தம் முறிந்தது. இது இருவரும் இணைந்தே எடுத்த முடிவு. இந்த அறிவிப்பின் மூலம் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.
எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். திருமண பந்த முறிவு எனது தனிப்பட்ட பிரச்சினை. மேலும், அது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எனவே, எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுங்கள். இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
News source :The Hindu

Comments
Post a Comment