எந்திரன் படத்தின் கதை மீது உரிமைகோரிய வழக்கில், இயக்குனர் சங்கர் தரப்பில் பதில் அளிக்காததால் மனுதாரரின் தரப்பு ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட்டில் ஆரூர் தமிழ்நாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
'இனிய உதயம்' என்ற மாத இதழில், 1996-ம் ஆண்டு 'ஜூகிபா' என்ற தலைப்பில் கதை எழுதினேன். அதில் ராபின் என்ற ஆராய்ச்சியாளர், 'சூப்பர் பவர் ரோபோட்டை' உருவாக்குகிறார். மனிதனை போல் தோற்றம் அளிக்கும் இந்த ரோபோட் மனிதர்களின் செயல்களில் 95 சதவீதம் செய்யும் திறமை கொண்டது.
பின்னர், 'திக் திக் தீபிகா' என்ற தலைப்பில் நாவலாகவும் இந்த கதை வெளியானது. இந்த கதையை அப்படியே எந்திரன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
இதற்காக என்னிடம் எந்த அனுமதியும் அவர் பெறவில்லை.
ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த என்னுடைய உறவினர்கள், 'ஜூகிபா' கதையை அப்படியே எந்திரன் படமாக எடுத்துள்ளதாக கூறினார்கள். இதையடுத்து இந்த படத்தை பார்த்து அது என்னுடைய கதை என்பதை உறுதி செய்தேன்.
எனவே, எந்திரன் படத்தின் கதை உரிமையாளர் என்றும், காப்புரிமை கொண்டவர் என்றும் என்னை அறிவிக்க வேண்டும். என்னுடைய 'ஜூகிபா' கதையை கொண்டு 'எந்திரன்' படக்கதையை உருவாக்கியுள்ளதாக அறிவிக்க வேண்டும். எனக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க இயக்குனர் சங்கர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய 'மாஸ்டர்' கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டார்.
News source:maalaimalar
Comments
Post a Comment