ரஜினி, அஜித்தை பின்பற்றும் ராம்கி.
'இணைந்த கைகள்',
'செந்தூரப்பூவே' ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ராம்கி, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கிய 'பிரியாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கும் 'இங்கிலீஷ் படம்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் 'குளிர்100' படத்தில் நடித்த சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனாட்சி, மதுமிதா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
காமெடி திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் ராம்கி, அஜித், ரஜினி ஆகியோரின் ஸ்டைலை பின்பற்றி நடித்துள்ளார். அதாவது, அஜித் சமீபத்திய படங்களில் எல்லாம் சால்ட் பெப்பர் ஸ்டைல் தலைமுடியுடன் நடித்திருந்தார். அதேபோல், ரஜினியும் தற்போது நடித்து வரும் 'கபாலி' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் தனது தலைமுடி மற்றும் தாடி வைத்து நடித்து வருகிறார்.
இவர்களை பின்பற்றி தற்போது ராம்கியும், 'இங்கிலீஷ் பட'த்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் தலைமுடி மற்றும் தாடி வைத்து நடித்து வருகிறார். இப்படம் குறித்து ராம்கி கூறும்போது, இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது, வில்லனும் கிடையாது. ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய படமாக அமையும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இப்படத்தை ஆர்.ஜே.மீடியா கிரிஷேயன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
Comments
Post a Comment