பலத்த பாதுகாப்புடன் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.super star rajini in kabali shooting starts
சென்னை,
ரஜினிகாந்தின் 'கபாலி' படப்பிடிப்பு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 20 நாட்கள் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடக்கிறது.
புதிய படம்
ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த 'லிங்கா' படம் கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் தற்போது, 'கபாலி' என்ற புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதில், கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இவர் 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். எஸ்.தாணு தயாரிக்கிறார்.
'கபாலி' படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தியான இன்று (வியாழக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது. ரஜினிகாந்த் வெள்ளை தாடியுடன் இயல்பான தோற்றத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் காட்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் படமாக்கப்படுகிறது.
20 நாட்கள்
ஏற்கனவே மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அது பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஸ்டூடியோக்களிலும், புறநகர் பகுதிகளில் உள்ள தோட்டங்களிலும் கலை இயக்குனர்களை வைத்து பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த அரங்குகளில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.
ஒருவாரம் ரஜினிகாந்த் மட்டும் நடிக்கும் அதிரடி சண்டைகள் மற்றும் வசன காட்சிகளை படமாக்குகின்றனர். அதன்பிறகு ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மலேசியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு ஒருமாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாதா வேடம்
'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாப்பூரில் அவர் வசிப்பதுபோன்றும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு ஏமாற்றப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதை கேள்விப்பட்டு, அவர்களை காப்பாற்ற மலேசியாவுக்கு போய் அங்குள்ள வில்லன்களை துவம்சம் செய்வது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கதை வெளியாகாமல் இருக்க படக்குழுவினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் வெளியாட்கள் வந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல்போனில் படங் களை எடுத்து இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடுவதை தடுக்க படப்பிடிப்புக்கு செல்போன் கொண்டுசெல்லவும் படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News source:dailythanthi
Comments
Post a Comment