சென்னை,
'கபாலி' படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் நேற்று மலேசியா புறப்பட்டுச்சென்றார். 60 நாட்களுக்குப்பின், அவர் சென்னை திரும்புவார்.
புதிய படம் 'கபாலி'
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் 'கபாலி'. இந்த படத்தை ரஞ்சித் டைரக்டு செய்கிறார். இவர் 'அட்டகத்தி,' 'மெட்ராஸ்' படங்களை இயக்கி பிரபலமானவர். இந்த படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.
வயதான தாதாவை பற்றிய படம். மலேசியாவுக்கு பிழைப்பு தேடிப்போய் அங்குள்ளவர்களால் ஏமாற்றப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாகும் தமிழர்களை சென்னையை சேர்ந்த ஒரு தாதா எப்படி மீட்டுக்கொண்டு வருகிறார் என்பதே கதை என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வேடம்
ரஜினிகாந்த் கருணை மனம் கொண்ட தாதா வேடத்தில் நடிக்கிறார். அவரது மகளாக தன்ஷிகா வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தியன்று சென்னை சோவியத் கலாசார மையத்தில் தொடங்கியது. அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தும் தன்ஷிகாவும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.
மலேசியா பயணம்
இதற்காக ரஜினிகாந்த் நேற்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுச்சென்றார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் சென்றார். படப்பிடிப்புக்குழுவினர் கடந்த வாரமே மலேசியா சென்றுவிட்டனர்.
படப்பிடிப்பு குறித்து மலேசியா சென்று இறங்கிய தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், ''கபாலி படப்பிடிப்புக்காக ரஜினிகாந்தும் நானும் மலேசியா வந்துள்ளோம். இங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பிறகு தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மொத்தம் 60 நாட்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுவிட்டு 60 நாட்களுக்குப்பிறகு சென்னை திரும்புவார்.'' என்றார்.
News source:maalaimalar.
Comments
Post a Comment