தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வென்றுள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளார்கள். பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விஷால் அணியை சேர்ந்த 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டனர். நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேற்று மாலை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் வந்தார்கள்.
அவர்கள் ஏற்கனவே வளாகத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோவில் இருந்த இடத்தில் தயிர் வைத்து மாலை அணிவித்து பூஜை செய்தனர்.
பின்னர் ஒருவருக்கொருவர் கை குலுக்கினார்கள். மாலை அணிவித்து மகிழ்ந்தனர். சக நடிகர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சியில் நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரை தோளில் தூக்கினர். அதன் பிறகு தியாகராயநகர் நரசிம்மன் தெருவில் உள்ள நடிகர் சங்கத்தின் தற்காலிக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நோட்டில் கையெழுத்திட்டு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
அவர்களிடம் நடிகர் சங்கத்தின் தஸ்தாவேஜுகள், வரவு-செலவு கணக்கு புத்தகங்கள், நடிகர் சங்க உறுப்பினர்கள் சம்பந்தமான விவர புத்தகங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் பழம்பெரும் நடிகை சச்சுவுக்கு நடிகர் சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினருக்கான அட்டையை விஷால் வழங்கினார். தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த வாரம் இறுதியில் பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை அழைக்க திட்டமிட்டுள்ளனர். 3,139 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையும் அழைக்க இருக்கிறார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டு கட்டிடம் கட்டுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் பூச்சி முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நடிகர்களே நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் என்றும், அதற்கு நிதி திரட்ட இளம் கதாநாயகர்கள் இணைந்து சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடிக்க தயார் என்றும் விஷால் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதுகுறித்தும் பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவது உள்பட மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
News source:maalaimalar
Comments
Post a Comment