நடிகர் தனுஷ் தயாரிப்பில், நயன்தாரா-விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள படம், 'நானும் ரவுடிதான்.' இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருக்கிறார். படப்பிடிப்பின்போது இவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதே படத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், மன்சூர் அலிகான் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழாவில், நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
''நானும் ரவுடிதான் படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்தினார்கள். மொகஞ்சதாரோ-ஹரப்பா மாதிரி செம்மண் பூமி. உச்சி வெயில் தாங்க முடியாத அளவுக்கு கொளுத்தியது. தூரத்தில், கட்டுப்பாடு இல்லாத சிட்டுக்குருவிகள் போல் ஒரு ஜோடி தெரிந்தது. அது, நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. அவர்கள் இருவருக்கும் வெயிலின் கொடுமை தெரியவில்லை.
நயன்தாரா யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்துக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
தனுஷ் படங்களில் கதாநாயகன்-கதாநாயகி சம்பந்தப்பட்ட ஊடல் காட்சிகள் இருக்கும். அது, இந்த படத்திலும் இருக்கிறது.
டைரக்டர் விக்னேஷ் சிவன் கல்லூரி மாணவர் போல் தெரிந்தார். கல்லூரி வகுப்பை 'கட்' அடித்து விட்டு வந்துள்ளவர் போல் காணப்பட்டார். காதல் காட்சிகளை அவர் அனுபவித்து படமாக்கியிருக்கிறார்.''
இவ்வாறு மன்சூர் அலிகான் பேசினார்.
பார்த்திபன் பேசியதாவது:-
''தமிழ்நாடு நடிகர் சங்கமா, இந்திய நடிகர் சங்கமா? என்று கேட்டபோது கவுண்டமணி, 'நடிகர் சங்கம்' என்று சொன்னது போல், இதில் கதாநாயகனாக நடிக்கிறீர்களா, வில்லனாக நடிக்கிறீர்களா? என்று கேட்டால், ''தெரியாது. நடிக்கிறேன். அவ்வளவுதான்'' என்பேன்.
இந்த படத்தில் தப்பு வர வாய்ப்பே இல்லை.
எதையும், யாரையும் 'கரெக்ட்' பண்ணும் திறமை உள்ளவர், டைரக்டர் விக்னேஷ் சிவன். எனவே இந்த படத்தில் தப்பு வர வாய்ப்பே இல்லை. மன்சூர் அலிகான் ஏதேதோ சொன்னார். நான் அடுத்தவர்களை கவனிப்பதில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பின்போதும் யாரையும் கவனிக்கவில்லை. கவனித்தால் அப்புறம் வருத்தப்பட வேண்டியிருக்கும். அனிருத்தின் ஆண் காதலர்களில் நானும் ஒருவன்.''
மேற்கண்டவாறு பார்த்திபன் பேசினார்.
விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அழகம்பெருமாள், பாலாஜி, டைரக்டர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், ஆர்ட் டைரக்டர் கிரண் ஆகியோரும் பேசினார்கள்.
News source:maalaimalar
Comments
Post a Comment