ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்புக்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். விமான நிலையத்திலேயே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலாய் மேயர் விருந்து அளித்தார். அந்த நாட்டு அரசு சார்பிலும் ரஜினி கவுரவிக்கப்பட்டார். ரஜினி வருகையை மலேசியாவில் உள்ள மக்களும் ரசிகர்களும் அவருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
செல்லும் இடம் எல்லாம் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலேசியாவில் மலாய், சீன, தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள். இந்த நாட்டுக்கு வேறு நாட்டு தலைவர்கள், நடிகர்கள் பிரபலமானவர்கள் வந்து செல்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருகையை மலேசியா நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.
எந்த பிரபலங்களையும் அந்த நாட்டு மக்கள் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளை மட்டும் கூட்டமாக சென்று ரசித்து பார்ப்பார்கள். ஆனால் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த நாட்டு மக்கள் இனமொழி பேதமின்றி வரவேற்று மகிழ்ந்தனர். மலேசியாவில் அவர் எங்கு சென்றாலும் ஏராளமானோர் அவரை தொடர்ந்து செல்கிறார்கள். சூட்டிங் நடைபெறும் இடங்களிலும் ஏராளமானோர் கூடி நின்று பார்த்து ரசிக்கிறார்கள்.
ரஜினி காலில் விழுந்து வணங்குகிறார்கள். செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அவரது கையை பற்றிக் கொள்கிறார்கள். முத்த மிடுகிறார்கள். உடம்பு முழுவதும் ரஜினி படத்தை பச்சை குத்திக் கொண்டு பெருமைப்படுகிறார்கள். அதை அவரிடம் காட்டி மகிழ்கிறார்கள். படம் எடுத்துக் கொள்கிறார்கள். ரஜினியின் கை தங்கள் மேல் பட வேண்டும் என்று விரும்பி அவரை நெருங்கி செல்கிறார்கள். ரஜினி ஒரு இடத்துக்கு வருகிறார் என்று அவர் புறப்படுவதற்கு முன்பே அங்கு காத்து நிற்கிறார்கள்.
ரஜினி தங்கும் ஓட்டல் வாசலிலேயே பலர் காத்துக்கிடக்கிறார்கள். ரஜினிக்கு மலேசிய மக்களிடம் இருக்கும் மரியாதை அந்த நாட்டு அதிகாரிகளையும், தலைவர்களையும் வியப்படைய செய்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் தொலைக் காட்சிகள், பத்திரிகைகள், சமூக வளை தங்களில் தினமும் ரஜினி பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை மக்கள் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள்.
மலேசிய மக்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கு பிரதிபலனாக ரஜினி அந்த நாட்டு ரசிகர்களை சலிப்பு இல்லாமல் சந்திக்கிறார். படப்பிடிப்புக்கு செல்லும் போதும், படப்பிடிப்பு இடைவேளை நேரங்களிலும், ஷுட்டிங் முடிந்து வரும் போதும் தன்னை பார்க்க, தொட விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். ரசிகர்களைப் பார்த்து கை அசைக்கிறார். கும்பிடுகிறார். கை கொடுக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் ஆட்டோ கிராப் போட்டு கொடுக்கிறார்.
ரஜினி மீது மலேசிய மக்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஷுட்டிங் நடக்கும் இடங்களில் ‘கபாலி’ படக்குழுவினருக்கும் தனி மரியாதை கிடைக்கிறது.
news source:maalaimalar