பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் ஆரம்பமாக உள்ளது. முதலில் இந்தப் படம் மலேசியாவில் ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.
இப்போது 'கபாலி' படத்திற்காக இரண்டு பிரம்மாண்டமான அரங்குகள் சென்னையின் இரு வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் படப்பிடிப்பு என்றாலே சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ ஆகிய இடங்களில்தான் அரங்குகளை அமைப்பார்கள். ஆனால், இப்போது அங்கு ஸ்டுடியோக்களில் உள்ள அரங்குகள் மிகவும் குறைந்துவிட்டது. இருக்கும் சில அரங்குகளை டிவி நிகழ்ச்சிகளை நடத்த எடுத்துக் கொண்டார்கள். சென்னையில் உள்ள திரைப்பட நகரமும் ஏறக்குறைய காணாமல் போய்விட்டது.
அதனால், இப்போது பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவிலும், பனையூரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவிலும் தான் நடைபெறுகின்றன. ஈவிபி ஸ்டுடியோவில் 'மாஸ், தூங்காவனம்' போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆதித்யராம் ஸ்டுடியோவில் 'புலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டு ஸ்டுடியோக்களில் தான் 'கபாலி' படத்திற்கான பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
News source :Dinamalar
Comments
Post a Comment